கோவை வருமான வரித்துறை கலந்தாய்வு கூட்டம்
கோவை; கோவை வருமான வரித்துறை சார்பில், பங்காற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கொடிசியா வளாகத்தில் நடந்தது.கோவை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண் பாரத், முதன்மை கமிஷனர் திவாகர் பிரசாத் ஆகியோர் தலைமை வகித்தனர். முக்கிய வரி செலுத்துநர்கள், வரி நிபுணர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, வரி செலுத்துநர்களுக்கான சேவை, வரி செலுத்துதல் தொடர்பான பிரச்னைகள் குறித்து தங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.தொழில்நுட்ப அமர்வில், ஆடிட்டர்கள் ராமசாமி, கார்த்திகேயன் ஆகியோர், புதிய வருமான வரிச் சட்டம், அதன் தோற்றம் மற்றும் மேம்பாடு, புதிய வருமான வரிச் சட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து விவரித்தனர். மின் ஆளுகை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்கள் குறித்து, இணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கண்ணா பேசினார். ஆடிட்டர் ராம்நாத், வருமான வரித் தாக்கலில் நேரும் பொதுவான பிழைகள், வரி செலுத்துகையில் ஆடிட்டர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார்.கொடிசியா தலைவர் கார்த்திகேயன், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.