மலேரியா ஒழிப்பு இலக்கை நோக்கி கோவை; ஆறு மாதங்களில் ஒரு பாதிப்பு கூட இல்லை
கோவை; தேசிய அளவில், மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கும் இலக்கு 2030 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தமிழகம் விரைவில் எட்டும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், 2014ம் ஆண்டு முதல் மலேரியா ஒழிப்பு செயல்பாடுகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030 இதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் விரைவில் இந்த இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 2020ல் 891 மலேரியா பாதிப்புகள் பதிவானது. 2024 ஆக., வரை 233 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை என, பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் அலுவலகத்தில், மண்டல பூச்சியியல் வல்லுநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இவர்கள் மலேரியா ஒழிப்பு பணிகள் முக்கிய களப்பணிகள், ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 'அனைவருக்கும் ரத்த பரிசோதனை'
மலேரியா ஒழிப்பு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகள், சமூக அமைப்புகள், குடியிருப்பு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துதல், மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி வைத்தல், பழங்குடியினர், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என, பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் அனைவருக்கும், ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. கோவையில் கடந்த ஆறு மாதங்களாக, மலேரியா பாதிப்பு பதிவாகவில்லை. மலேரியா ஒழிப்பு விரைவில் இலக்கு எட்டப்படும்.- பாலுசாமி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்