ஐந்தாவது மூத்தோர் சர்வதேச தடகள போட்டி 13 பதக்கங்கள் குவித்த கோவை அணியினர்
கோவை, : தாய்லாந்து நாட்டில் உள்ள சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில், ஐந்தாவது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு நாட்கள் நடந்தது.இந்திய அணிக்காக, தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை சேர்ந்த, 10 வீரர்கள், நான்கு வீராங்கனைகள் என, 14 பேர் பங்கேற்றனர்.இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 30 முதல், 90 வயது வரையிலான, 120 வீரர், வீராங்கனைகளும், 410 தாய்லாந்து வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில், நடைபந்தயம், ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், போல்வால்ட், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.பதக்க முனைப்புடன் போராடிய கோவை வீரர்கள், தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட, 13 பதக்கங்களை வென்றனர். 800 மீ., 1,500 மீ., ஓட்டம், 5 கி.மீ., நடைபயண போட்டிகளில், கருணாகரன் மூன்று தங்கம் வென்று அசத்தினார்.தொடர் ஓட்டத்தில் பாலு, துரைராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கம் வென்றனர். போல்வால்ட் போட்டியில் நஸ்ருதீன் வெள்ளியும், நீளம் தாண்டுதலில் வேலுசாமி, உயரம் தாண்டுதலில் பாலு ஆகியோர் வெண்கலமும், 5 கி.மீ., நடைபயண போட்டியில், பழனிச்சாமி ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.பெண்கள் பிரிவில், மும்முறை தாண்டுதலில் ராதாமணி வெள்ளி, 5 கி.மீ., நடைபயண போட்டியில் சுதா வெண்கலம் வென்றனர். 100 மீ., தொடர் ஓட்ட போட்டியில், ராதாமணி மற்றும் சுதா தங்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, தடகள சங்க செயலாளர் வேலுசாமி, பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, அணி ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தனன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.