கோவை மண்டல கனிமவள துணை இயக்குனர் மாற்றம்
கோவை; கோவை மண்டல கனிமவளத்துறை துணை இயக்குனராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற பன்னீர் செல்வம், திடீரென்று சென்னை தலைமை செயலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலுார், கோவை வடக்கில் ஒரு சில பகுதிகளில் கனிமவளம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதிலிருந்து ஜல்லிகற்கள், சைஸ்கற்கள், கல்கால்கள், நிலஅளவை கற்கள், போல்டர் போன்றவை தவிர, எம்.சேண்ட் மற்றும் பி.சேண்ட் ஆகியவை தயாரிக்கப்பட்டு, கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் விதிமுறை மீறல், கனிமவளம் கடத்துதல், அனுமதிச்சீட்டின்றி எடுத்து செல்லுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. அது மட்டுமின்றி, அரசியல் தலையீடுகளும் உள்ளன. இச்சூழலில், கோவை மண்டல கனிமவளத்துறை துணை இயக்குனராக கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்த பன்னீர் செல்வம், எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் கூறுகையில், ''நிர்வாக காரணங்களுக்காக, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளேன்,'' என்றார். பன்னீர்செல்வத்தின் மாற்றம், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, ஜூலை 26-கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில், காங்., கவுன்சிலர் நவீன்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர் (காங்.,) கிருஷ்ணமூர்த்தி, கடந்தாண்டு உயிரிழந்தார். அவர், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். அப்பதவியை நிரப்புவதற்கான மறைமுகத் தேர்தல், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி பணியாற்றினார். ஐந்தாவது வார்டு கவுன்சிலர் (காங்.,) நவீன்குமார், மனு தாக்கல் செய்தார். காங்., கவுன்சில் குழு தலைவர் ஜெயபால் முன்மொழிந்தார். ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் வழிமொழிந்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, கமிஷனர் அறிவித்தார். அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். கவுன்சிலர் பதவி நிரப்புவது எப்போது மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் பதவி இன்னும் காலியாகவே இருக்கிறது. இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்தபோது, சிறப்பு கவனம் செலுத்தி, தார் ரோடு, மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு காரணமாக, இடைத்தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வார்டுக்கான அடிப்படை தேவையை மாநகராட்சி கவனத்துக்கு கொண்டு செல்ல, கவுன்சிலர் அவசியம் தேவை என்பதால், விரைந்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.