பார்க்கிங் கட்டணம் வசூல்; கண்டுகொள்ள யாருமில்லை; மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு
கோவை : டி.கே.மார்க்கெட் வாகனபார்க்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான டெண்டர் கடந்த ஐந்தாண்டுகளாக விடப்படாததால், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கோவை ராஜவீதியையும், பெரியகடைவீதியையும் இணைக்கும் வகையில், சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள தியாகி குமரன் மார்க்கெட் கிழக்குப்பகுதியில் மளிகை கடைகளும், மேற்குப்பகுதியில், காய்கறிகடைகளும், காய்கறி மண்டிகளும் அமைந்துள்ளன. மேற்குப்பகுதியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவில் மைதானத்தின் ஒரு பகுதியில், மார்க்கெட்டின் வாகன பார்க்கிங் அமைந்துள்ளது.இங்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல், காய்கறி லோடு இறக்குவதற்கு வரும் லாரிகளும், கட்டண அடிப்படையில் நிறுத்தப்படுகின்றன. இதுதவிர மார்க்கெட்டிற்கு வருவோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களும், நகைக்கடைகளுக்கு வரும் கார்களும் பார்க் செய்யப்படுகின்றன.இதற்கு, மாநகராட்சி சார்பில் குத்தகைதாரர்கள், இருசக்கரவாகனம், கார், இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனம் என்று வகை வகையாக பிரித்து, மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, டி.கே.மார்க்கெட்டில் உள்ள வாகன பார்க்கிங்கிற்கான கட்டணம் வசூலிக்க, டெண்டர் மற்றும் ஏலம் அறிவிக்கப்படவில்லை.அதற்கான குத்தகை மற்றும் ஏலதாரரை, மாநகராட்சி நிர்வாகம் நியமிக்கவும் இல்லை. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக தடையின்றி வாகன பார்க்கிங்கிற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்விரு விஷயங்களுக்காக, மாநகராட்சி நிர்வாகம் இரண்டு முறை ஏலம் அறிவித்தது. ஏலதாரர்கள் பங்கேற்றனர். ஆனால் ஏலம் விடப்படாமல், தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்பிரச்னையில், 'மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக விருப்பமிருக்கும் அனைவரும் பங்கேற்கும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும் வகையிலும், ஏல அறிவிப்பு வெளியிட வேண்டும்.அதன்வாயிலாக, நியாயமான ஏலதாரர் நிர்ணயம் செய்யப்பட்டு, வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் நியாயமான பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியும்' என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:டி.கே.மார்க்கெட் பார்க்கிங் ஏலம் விட, பலமுறை அறிவிப்பு வெளியிட்டு விட்டோம். குறைந்த பட்ச ஏலத்தொகையே தொடர்ந்து கோருவதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அதனால் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அடுத்து ஏலம் அறிவிக்கப்பட்டு விடப்படும். ஏலதாரர்கள் அனைவரும் பங்கேற்க, ஏற்பாடு செய்யப்படும். இதில் யாருடைய தலையீடும் இருப்பதற்கு, வாய்ப்பு இருக்காது. இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
தெரிந்தும்...தெரியாதது போல்!
இந்த வாகன பார்க்கிங் விவகாரம், மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழுமையாக தெரிந்திருந்தும், டெண்டர் அறிவிப்பை ஒத்திவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.இதனால் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னதாக, டெண்டர் எடுத்தவர்களே தற்போதும் பார்க்கிங் கட்டணத்தை, எவ்வித உத்தரவும் இன்றி வசூலித்து வருகின்றனர்.இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கேட்பதில்லை. அதோடு மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்க, பணியாளர்களையும் நியமிக்கவில்லை. இதனால் மாநகராட்சிக்கு தொடர்ந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.