உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடையை மீறும் சுற்றுலா பயணியர் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு

தடையை மீறும் சுற்றுலா பயணியர் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு

வால்பாறை; தடையை மீறி ஆறுகளில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியரை தடுக்க, போலீசார் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் சென்று வரும் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை, சோலையாறுஅணை கரையோரப்பகுதிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, நகராட்சி துறைகளின் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு அக்., 20ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா வந்த, ஐந்து கல்லுாரி மாணவர்கள், சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதையில் உள்ள ஆற்றில் குளிக்கும் போது, நீர்சூழலில் சிக்கி உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து, சிறுகுன்றா கூழாங்கல்ஆறு, சின்னக்கல்லாறு, சோலையாறு அணை உள்ளிட்ட, 20 இடங்களில் சுற்றுலா பயணியர் செல்லவோ, குளிக்கவோ கூடாது என, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தடை விதித்தார்.இதனை தொடர்ந்து, சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றையொட்டி இருந்த தற்காலிக கடைகளை போலீசார் அகற்றினர். இருப்பினும் தடை விதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சுற்றுலா பயணியர் சென்று அத்துமீறி குளிக்கின்றனர். இதனால், மீண்டும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியர் செல்லாதவாறு, கம்பி வேலி அமைப்பதுடன், எஸ்டேட் அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும்' என்றனர்.

கண்காணிப்பு தேவை

வால்பாறையில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றையொட்டி தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தப்பகுதியில் பகல் நேரத்திலேயே யானைகள், அடிக்கடி முகாமிடுகின்றன.இதனிடையே கூழாங்கல் ஆற்றில் குளிக்க வரும் சுற்றுலா பயணியர் கும்பலாக சென்று, மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து ஆற்றில் வீசிச்செல்கின்றனர். இதனால், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் நாட்களில் போலீசாருடன், வனத்துறையினரும் இணைந்து கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை