வாக்காளர் பட்டியலில் பெயர்; கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
சூலுார்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டினர். சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரியில், இளம் வாக்காளர்களை சேர்க்கும் முகாம் நேற்று நடந்தது. சூலுார் தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், நகர்புற நிலவரி உதவி கமிஷனருமான சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலரும், துணை கமிஷனருமான ( கலால்) முருகேசன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: 18 வயது பூர்த்தி யடைந்த ஒவ்வொருவரும் வாக்காளர்களாக சேர வேண்டும். தேர்தல்களில் தவறாது ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தால், தகுதியுள்ள தலைவர்களை தேர்வு செய்ய முடியும். நாம் ஒருவர் ஓட்டளிக்காவிட்டால் என்ன மாற்றம் நடந்து விட போகிறது என, எண்ண வேண்டாம். நீங்கள் அளிக்கும் ஒரு ஓட்டு தான் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஓட்டளிப்பது நமது உரிமை; அதை தவறாது செய்வது நமது கடமை. இவ்வாறு, அவர் பேசினார்.தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம், ஆன்லைன் வாயிலாக வாக்காளராக எப்படி சேருவது குறித்து தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முத்து மாணிக்கம் விளக்கினார். இதையடுத்து, 529 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். தேர்தலில் தவறாமல் ஓட்டளிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். தாசில்தார் சரண்யா, கல்லுாரி முதல்வர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி, தேர்தல் பிரிவு இளநிலை வருவாய் அலுவலர் தண்டபாணி, கல்லுாரி பேராசிரியர்கள் ராஜேஷ், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.