வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லுாரி மாணவர்கள்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனப்பகுதியின் இரு பக்கம் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளையும், பாட்டில்களையும் சுத்தம் செய்யும் பணிகளில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகள் இடையே அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் வழியாக செல்பவர்கள், வனப்பகுதியின் ஓரத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், குடிநீர் பாட்டில்கள், மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இது இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு, இதை சுத்தம் செய்யும் பணிகளில், மேட்டுப்பாளையம் வனத்துறையினருடன், மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் இணைந்து ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் உத்தரவின் பேரில், குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா மேற்பார்வையில், கல்லூரி மாணவர்களுடன், வனவர் சிங்காரவேலு, வனக்காப்பாளர்கள் முனுசாமி, ஹக்கீம், உதயன் உட்பட, 20 வனப் பணியாளர்கள், 64 மாணவ, மாணவியர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில்,10 மூட்டைகள் குப்பைகளை சேகரித்தனர்.