கடன் வாங்கிய தி.மு.க., அரசு மீது விசாரணை கமிஷன்: இ.பி.எஸ்.,
கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து, தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை, 7:00 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.வெள்ளை நிற டிராக் ஷூட்டில் மலர்ச்சியுடன், நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பழனிசாமியைப் பார்த்ததும், பொதுமக்கள் உற்சாகமாக அவரை நெருங்கி, போட்டோ எடுத்துக் கொண்டனர். நடைபாதையில் இருந்த சுண்டல் வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்த இ.பி.எஸ்., 'என்ன வியாபாரம் செய்கிறீர்கள். எலுமிச்சை பழம் எவ்வளவு? வாங்கி விற்கிறீர்களா, அறுவடை செய்கிறீர்களா' எனக் கேட்டு, 100 ரூபாய்க்கு எலுமிச்சை வாங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அ.தி.மு.க.,வுக்கு கோவை ராசியான மாவட்டம். எங்கு சென்றாலும் மக்கள் எழுச்சியோடு வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம். 2024-2025ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு உபரி வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும் தி.மு.க., அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக, 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.தி.மு.க., அரசு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவில்லை. சிறுவாணி அணை துார்வாரப்படவில்லை. நான்கு லட்சம் பேருக்கு, அரசு வேலை என தேர்தல் வாக்குறுதியில் கூறியது; 50 ஆயிரம் பேருக்கே வேலை அளித்துள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம், அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.