சொத்து வரி வசூலிக்க குழுக்கள் அமைப்பு; அனைத்து நாட்களிலும் வசூல் மையம் திறப்பு
பொள்ளாச்சி; ''பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி வசூலிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டியுள்ளது.இந்த வருவாயை கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன. தற்போது, வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், திருப்பூர் மண்டலத்தில் உள்ள, 21 நகராட்சிகளில், பொள்ளாச்சி நகராட்சி அதிகளவு சொத்து வரி வசூலிக்காமல் மண்டலத்திலேயே கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வரி வசூலை தீவிரப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:சொத்து வரி வசூல் செய்வதற்கு நகராட்சியின், 36 வார்டுகளுக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு வரி வசூல் பணி மேற்கொள்ளப்படுகிறது. 'ஆன்லைன்' வாயிலாக, சொத்து வரி செலுத்த கேட்பு அறிவிப்பில், 'க்யூஆர்' கோடு சேர்க்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த ஏதுவாக, அனைத்து விடுமுறை நாட்களிலும் வசூல் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுவரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் அனைவருக்கும் 'ஜப்தி' நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.உரிய அரையாண்டுக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவோரின் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சொத்து வரி நிலுவை தொகையை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, 'ஜப்தி' மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பலமுறை கேட்டுக்கொண்டும் இதுவரை வணிக பயன்பாட்டில் இருக்கும் கட்டடங்களுக்கு உரிய சொத்து வரியை முறைப்படுத்தாத கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து, ஜி.எஸ்.டி., மற்றும் மின் இணைப்பு பெற்ற நாளில் இருந்து, வணிக பயன்பாட்டுக்கான சொத்து வரி விதிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பார்க்கிங் ஸ்டாண்ட் அனுமதியிருக்கா?
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நகராட்சியின் உரிமம் பெறாமல் தனியார் வாகன நிறுத்தமிடங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 விதி எண், 294 (10)ன் படி எந்த ஒரு தனிநபரும், நிறுவனமும் நகராட்சி கமிஷனரிடம் உரிமம் பெற்ற பின்னரே, தனியார் வாகன நிறுத்த இடம் ஏற்படுத்தி நிர்வகிக்க முடியும்.எனவே, தனியார் வாகன நிறுத்த இடங்களுக்கு, 15 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தை அணுகி,உரிய உரிமத்தை பெற்று முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட விதிகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பூட்டி 'சீல்' வைக்கப்படும், என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.