விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம்; ஒப்பந்ததாரர் உட்பட இருவர் மீது வழக்கு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நவமலை பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த, ஆறு பெண்கள் உள்ளிட்ட, 22 பேர், நேற்றுமுன்தினம் சரக்கு வாகனத்தில், நெகமம் காட்டம்பட்டிக்கு பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணிக்காக சென்றனர்.வாகனத்தை, நவமலை பகுதியை சேர்ந்த தேவபாலன்,23, என்பவர் ஓட்டிச் சென்றார். சின்னார்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. அதில், பயணித்தவர்கள், துாக்கி வீசப்பட்டனர். விபத்தில், மூன்று பேர் இறந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் வருவாய்துறையினர், நோயாளிகள் நலச்சங்கத்தினர் உதவிகளை செய்தனர்.இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.நேற்றுமுன்தினம் மாலை எம்.பி., ஈஸ்வரசாமி, நகராட்சி தலைவர் சியாமளா, தி.மு.க., தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி, மாவட்ட நிர்வாகத்தினர், நிவாரண நிதி வழங்கினர்.பொள்ளாச்சி எம்.பி., கூறுகையில், ''முதல்வரின் உத்தரவின் பேரில் விபத்தில் காயமடைந்த, 11 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய், படுகாயமடைந்த, எட்டு பேருக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய்; இறந்த மூன்று பேருக்கு தலா, மூன்று லட்சம் ரூபாய் என மொத்தம், 22.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது,'' என்றார். வழக்குப்பதிவு
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து, ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்தனர். டிரைவர் தேவபாலன், பொள்ளாச்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல், அதிவேகம், அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதற்காக டிரைவர் மீதும், முறையான பாதுகாப்பு இல்லாமல் வாகனங்களை இயக்க அனுமதித்தது உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பந்ததாரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.