அத்திக்கடவு திட்டம் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என புகார்
அன்னுார்; 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை,' என, தன்னார்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி மூன்று மாவட்ட மக்கள் 60 ஆண்டு காலமாக போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, அ.தி.மு.க., அரசு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி துவக்கியது. 1,914 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.இதில் மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட வேண்டும். ஆனால் பல குளம், குட்டைகளுக்கு, ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. சில குளம், குட்டைகளில் வெறும் ஐந்து முதல் 10 சதவீதம் நீர் மட்டுமே வந்துள்ளது.சிறுமுகை ரோடு, ஓதிமலை ரோடு, பச்சாபாளையம் ரோடு, காரமடை ரோடு, என பல பாதைகளில் குழாய் உடைப்பு மற்றும் கசிவால், பல ஆயிரம் லிட்டர் நீர் வீணாக சாலையோர பள்ளத்தில் செல்கிறது.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,' குழாய் பதிக்கப்பட்டுள்ள இடம் குறித்து, நெடுஞ்சாலை துறை, மின்வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் அடையாள கற்கள் நட வேண்டும்.குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குளங்களுக்கு தண்ணீர் வராத இடங்களில் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து நீர் வரும்படி செய்ய வேண்டும். குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.எஸ்., கருவியைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும்.ஒவ்வொரு குளத்திற்கும் தனியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து குழு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் பராமரிப்பு பணிக்கான கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் குளங்களுக்கு செல்லும் பிரதான குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, 1045 குளம், குட்டைகளிலும் நீர் நிரம்பும். தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்,' என்றனர்.