சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை இரவு நேரங்களில் விபத்து அபாயம்
சூலுார் : சூலூர் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து, பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் கான்கிரீட் கலவை மீதமடைந்தால், அதை பொது இடங்கள், கிராமப்புற சாலை ஓரங்களில் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.கலவை இறுகி, பாறை போல் மாறிவிடுவதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், ரோட்டில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மயிலம்பட்டி, முத்துக்கவுண்டன் புதூர், திருச்சி ரோடு, நீலம்பூர் பை பாஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கலவை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.சூலூர் பி.டி.ஓ., முத்தூராஜூ கூறுகையில், ''கிராமப்புறங்களில் பொதுஇடங்கள், ரோடுகளை ஒட்டி கான்கிரீட் கலவையை கொட்டுவோர் கண்டறியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.மீதமான கலவைகளை ரோட்டில் வீணாக கொட்டுவதை தவிர்த்து, வீடு கட்டும் ஏழைகள் அல்லது ஊராட்சிகளில் பொதுவான பணிகளுக்கு கொடுத்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும், என, சமூக ஆர்வலர்கள் கூறினர்.