காங்., தேசிய பொது செயலர் முன்ஜாமின் மனு வாபஸ்
கோவை; கோவை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட காங்., பொது செயலாளர் முன் ஜாமின் மனு, வாபஸ் பெறப்பட்டது. காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால், கடந்த 17ம் தேதி, கோவை விமான நிலையம் வந்த போது, அவரை வரவேற்க காங்., தொண்டர்கள் சென்றனர். அப்போது, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொது செயலாளரான செல்வத்திற்கும், தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கும், இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், ஜெயகுமார், தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்ந்து செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் மூவர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், முன்ஜாமின் கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், ஜெயகுமார், தமிழ் செல்வன் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, முன்ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக, இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.