கட்டுமான பணி இழுத்தடிப்பு; ரூ. 4.55 லட்சம் இழப்பீடு
கோவை; கோவை, ராமநாதபுரம், நேருநகர் விரிவாக்கம்பகுதியை சேர்ந்த குணசேகரன் - சரோஜா தம்பதியர், வெள்ளலுாரை சேர்ந்த டி.ஆர்.அன்கோ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ராஜசேகர் என்பவரை அணுகி, புதிய வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்தனர்.ஆறு மாதத்திற்குள் கட்டுமான பணியை முடித்து தருவதாக உறுதி அளித்துவிட்டு, ஓராண்டு வரை இழுத்தடித்தனர். இதனால், குணசேகரன் தம்பதிக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. கட்டுமான பணி தரமாக இல்லாததால், 4.55 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, கட்டுமான நிறுவனம் மீது, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக, 4.55 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.