பதவி உயர்வில்லாமல் கலந்தாய்வு; அரசு மீது ஆசிரியர்கள் தாம் துாம்
கோவை; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், கலந்தாய்வு தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 455 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, எமிஸ் தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19ல் துவங்கி 25ம் தேதியுடன் முடிவடைந்தது. 80,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளனர்.இந்த ஆண்டு, ஆசிரியர்கள் பணியாற்றும் தற்போதைய பள்ளியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வை, பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல், மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடைபெறுவதால், உபரி ஆசிரியர்களை அதே ஒன்றியத்தில் பணியமர்த்த முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் வேறு ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.ஏற்கனவே தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பதவி உயர்வு வழங்கப்படாமல் கலந்தாய்வு நடத்தப்பட்டால், அந்த பணியிடங்களை நிரப்பும் செயல்களில் முறைகேடு ஏற்படலாம்' என்கின்றனர்.
முறைகேடான விண்ணப்பங்கள்
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வில், புகார்களுக்கு உள்ளான, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் ஓராண்டு பணியாற்ற வேண்டிய அவசியமில்லை என்ற தளர்வை பயன்படுத்தி விண்ணப்பித்து உள்ளனர். இது ஆபத்தானது' என்றனர்.