பயிர் கடன் அளவு நிர்ணயம் 25ல் ஆலோசனை கூட்டம்
கோவை: விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன் தொகை, ஒரு குறிப்பிட்ட பயிருக்குத் தேவையான அடிப்படை நிதி அளவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. விவசாயி நிலத்தின் அளவு மற்றும் பயிரிடும் பயிரின் வகையைப் பொறுத்து, கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், குறிப்பிட்ட பயிர்களுக்கு, கடன் அளவு நிர்ணயிக்கப்படும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென்னை, வாழை, டெல்டா மாவட்டங்களில் நெல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சம்பந்தப்பட்ட பயிர்கள் பிரதானம். இவற்றுக்கு கடன் அளவு நிர்ணயிப்பதற்கான கூட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும். கோவை மாவட்டத்தில், 25ம் தேதி, காலை 11 மணியளவில், சாய்பாபா காலனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண், தோட்டக்கலை, கால்நடை, பட்டு வளர்ச்சி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.