ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடையாது.. ஏன் இந்த பாரபட்சம்?
கோவை : மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், மழை காலங்களில் நோய் பாதிப்பு, மின்சார ஷாக் அபாயத்தை சந்திப்பதாக குமுறுகின்றனர்.கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தர, 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த டிரைவர், கிளீனர்கள் பணிபுரிகின்றனர். குப்பை அள்ளும் பணி, இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியாரிடம் வழங்கப்பட்டது.பழைய ஒப்பந்தம் முடிவடைந்து கடந்த, 1ம் தேதி முதல் புதிய ஒப்பந்ததாரர் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது. மழைக்கு மத்தியிலும், மக்கள் சுகாதார நலனை பேணி காக்கும், இவர்களுக்கு ரெயின் கோட், ஷூ போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளை சந்திப்பதாக குமுறுகின்றனர்.பாரதிய கோவை மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர்(துாய்மை பணியாளர் பிரிவு) ஸ்டாலின் பிரபு கூறியதாவது:மழையில் எண்ணற்ற பிரச்னைகளை, துாய்மை பணியாளர்கள் சந்திக்கின்றனர். கடந்த ஒப்பந்ததாரர் முதல் இன்று வரை உள்ள ஒப்பந்ததாரர்கள் எவரும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ரெயின்கோட், ஷூ போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை.இதனால், சளி, இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று வியாதிகள் தாக்கிவருகின்றன. மழைக்காலங்களிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று, பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.மின் கம்பங்களை ஒட்டிய பகுதிகளில் சாக்கடை அடைப்பு, குப்பை அகற்றும் பணியின்போது, இரும்பு உபகரணங்களை பயன்படுத்துவதால், 'ஷாக்' அபாயமும் உள்ளது. நிரந்தர பணியாளர்களை போல் எங்களுக்கும், மரத்தினாலான கைப்பிடி பொருத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட, அனைத்தும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். வழங்க நடவடிக்கை!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''மாநகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளும் பணிக்கு தற்போது புதிய ஒப்பந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. எனவே, புதிய ஒப்பந்ததாரரிடம் பேசி, இதுவரை மழைக்கால பாதுகாப்பு உகரணங்கள் கிடைக்காத தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு, உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.