காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துங்க: கலெக்டரிடம் தி.மு.க., வலியுறுத்தல்
கோவை: விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டுமென கலெக்டரிடம், தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். 'பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்துக்குட்பட்ட கோதவாடி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் மக்காச்சோளம், வாழை, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கிறது. கோதவாடி குளத்திலுள்ள புதர்களில், நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உள்ளன. இங்கிருந்து கூட்டமாக வெளியேறும் காட்டுப் பன்றிகள், அருகருகே உள்ள கிராம விளை நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் கோதவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கோதவாடி சுற்றுப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி, கலெக்டர் பவன்குமாரிடம் தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் மனு அளித்தார். அவருடன் கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கலங்கல் கிளை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.