மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்; ஒரே நாளில் 44 மனுக்களுக்கு தீர்வு
கோவை: கோவை மேற்கு மண்டலத்தில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம், வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.சொத்து வரி மற்றும் காலியிட வரி பெயர், காலியிட வரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் கட்டுதல், சாலை வசதி, டி.எஸ்.எல்.ஆர்., நகல் மற்றும் பெயர் மாற்றம், கட்டட வரைபட அனுமதி, மனை வரன்முறைப்படுத்துதல், சர்வே வரைபடம் உள்ளிட்ட கோரிக்கைகள் கோரி, பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.இதில், 44 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள, 272 மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண, மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.வருவாய்த்துறை சார்பில் பெறப்பட்ட, பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணவில்லை.முகாமில், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சிவக்குமார், மண்டல தலைவர் தெய்வயானை, நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.