கராத்தே போட்டியில் கலக்கிய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
கோவை; மாநில அளவிலான கராத்தே போட்டியில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.கரும்புக்கடை பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான அனைத்து பிரிவினருக்கான(ஓபன்) கராத்தே போட்டி நடந்தது. இதில், கணபதி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.ஆக்ரோஷமாக விளையாடி மாணவ, மாணவியர், 10 பேர் 'கட்டா' பிரிவில் முதல் பரிசை தட்டினர். இரண்டாம் பரிசை மாணவ, மாணவியர் ஆறு பேரும், மூன்றாம் பரிசை நான்கு பேரும், 'பைட்டிங்' பிரிவில் முதல் பரிசை, 9 பேரும் வென்றனர்.இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை தலா இருவரும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்குமார், உடற்கல்வி ஆசிரியர் முத்தையா மற்றும் கராத்தே பயிற்சியாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.