உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருத்தி, பாலியெஸ்டர் விலை உயர்வு; ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம்

பருத்தி, பாலியெஸ்டர் விலை உயர்வு; ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம்

கோவை; சர்வதேச சந்தை விலையை விட நம் நாட்டில் பருத்தி, விஸ்கோஸ், பாலியெஸ்டர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, ஜவுளித் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.நம்நாட்டில் கடந்த, பத்தாண்டுகளுக்கு முன் ஆண்டுதோறும் 385 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு வந்த சூழலில் படிப்படியாக குறைந்து, 350 லட்சம் பேல்களாகவும் தற்போது, 320 லட்சம் பேல்களாகவும் குறைந்துள்ளது. அதனால் சர்வதேச விலையை விட நம் நாட்டில் விலை உயர்ந்துள்ளது.இன்றைய சூழலில் முதல் தர பருத்தி நம்நாட்டில் ஒரு கேண்டி (356 கிலோ) 54,000 ரூபாயாக உள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில், 46,000 ரூபாய் மட்டுமே. இன்றைய சூழலில் நம்நாட்டு பருத்தி விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.பருத்தி மட்டுமின்றி விஸ்கோஸ், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் விலையும் சர்வதேச சந்தையை விட நம்நாட்டில் ஒரு கிலோவுக்கு, 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியாமல் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அகில இந்திய பருத்தி அபிவிருத்தி கழக (சிட்டி) தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:மத்திய அரசு பருத்திக்கு விதிக்கப்படும், 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். விஸ்கோஸ், பாலியெஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை பொருட்களை நம்நாட்டில் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கெடுபிடிகளை தவிர்ப்பது நல்லது.இது குறித்து மத்திய நிதியமைச்சர், ஜவுளித்துறைஅமைச்சர், செயலர் உள்ளிட்டோரிடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஜவுளித்தொழிலில் நிலவும் மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்னை குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ