கவுன்சிலர் அர்த்தமற்ற பேச்சு; கமிஷனருக்கு அவமரியாதை: அவசர கூட்டத்தில் காரசார விவாதம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில், குப்பை எடுப்பது குறித்து எழுந்த விவாதத்தில், கமிஷனர், தலைவரிடம், கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி நகராட்சியில், கவுன்சில் அவசர கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:மாணிக்கராஜ் (தி.மு.க.,): தீர்மானங்கள் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும்; தீர்மான எண் மட்டும் கூற வேண்டாம். தீர்மானம் என்னவென்று படிக்கணும். படிக்காமலே ஒரு மனதாக நிறைவேற்றுவது; 'ஆல்பாஸ்' செய்வது கூடாது.தலைவர்: பல கூட்டங்களில் இதே நடைமுறை தான் உள்ளது. தீர்மான நகல் அனைவருக்கும் கூட்டத்துக்கு முன்பாக வழங்கப்படுகிறது.தீர்மானம் ஒவ்வொன்றாக படித்தால்,நேரம் வீணாகும். எந்த தீர்மானத்தில் விளக்கம் வேண்டுமோ அதை மட்டும் படிக்கலாம்.மாணிக்கராஜ்: நகராட்சி பகுதியில் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. ஆங்காங்கே குவித்து எரிக்கின்றனர். இதற்கு கமிஷனர் பதில் கூற வேண்டும்.கமிஷனர்: கேள்விகளை நகராட்சி தலைவர் வாயிலாககேட்கலாம். சந்தேகம் இருந்தால் நான் விளக்கம் கொடுக்கிறேன். குப்பை அள்ளுவதை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாக்கடை சுத்தம் செய்வது, குப்பையை உரமாக்குவது நகராட்சி ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.தலைவர்: கவுன்சிலர் பொறுமையாக கேள்வியை கேட்கலாம். குப்பையை தரம் பிரித்து கொடுக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் என்னிடம் பிரச்னைகளை தெரிவிக்கலாம்.மாணிக்கராஜ்: உங்களிடம் சொல்ல வேண்டும் என அவசியமில்லை. கமிஷனர், கவுன்சிலர்கள் எல்லாருக்கும் காக்கிச்சட்டையை கொடுத்து விடுங்க. (இவ்வாறு பேசியதும், கமிஷனர், கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது).கமிஷனர்: கூட்டத்தில் தலைவரிடமே கேள்விகள் கேட்க வேண்டும். நீங்க என்னை அவமதிக்கும் வகையில் பேசுவதாக கருதுகிறேன். தலைவரை உதாசீனப்படுத்தக்கூடாது. நீங்கள் கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி என்னிடம் கொடுக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன். நான் இங்கு இருக்க வேண்டும் என்பதே கிடையது.இவ்வாறு, கூறி விட்டு, கூட்டத்தில் இருந்து கமிஷனர் கிளம்பிச் சென்றார்.இதையடுத்து, கவுன்சிலர் பேசியதற்கு தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தீர்மான எண் மட்டும் படித்து கூட்டத்தை நிறைவு செய்தார். இச்சம்பவத்தால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இடத்தை வழங்கும் தீர்மானம் ரத்து!
கோவை கலெக்டர் கடிதத்தின்படி, கோவை மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் இடங்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் வாயிலாக பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்றி, தேவையான மருத்துவ வசதி, சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்க, மத்திய அரசால் சமூக நலத்துறையின் வாயிலாக, ஒருங்கிணைந்த மகளிர் சேவை மையம் அமைக்க, 300 ச.மீ., இடம் தேவைப்படுகிறது.இதற்கு, அம்மா திருமண மண்டபம் அருகேயுள்ள காலியிடத்தில், 300 ச.மீ., இடத்தை ஒருங்கிணைந்த மகளிர் சேவை மையம் கட்ட, அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பின்படி நிலத்துக்கான தொகை பெற்றுக்கொண்டு, நுழைவு அனுமதி வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்ப மன்ற அனுமதி வேண்டப்படுகிறது, என, 13வது தீர்மானம் படிக்கப்பட்டது.இதற்கு, அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.துணை தலைவர் கவுதமன் பேசுகையில், ''நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக தலைவர் அறிவிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, 13வது தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் ரத்து செய்ய மன்றம் முடிவு செய்கிறது, என, தலைவர் அறிவித்தார்.