அவசர சமயங்களில் உயிரை காக்கும் சி.பி.ஆர்., முதலுதவி
கோவை; இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தின், கோவை கிளை மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'அடிப்படை உயிர் ஆதரவு (பி.எல். எஸ்.,) மற்றும் அவசரகால உயிர் காக்கும் முதலுதவி (சி.பி.ஆர்.,) தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு, நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவமனை அரங்கில் நடந்தது. இதில், பி.எஸ்.ஜி., மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் ஜெயவர்த்தனா கூறியதாவது: மாரடைப்பு, இதய செயலிழப்பு ஏற்படும் சமயங்களில், விரைவாக சி.பி.ஆர்., எனும் முதலுதவி செய்வதன் வாயிலாக, உயிரை காப்பாற்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 70 சதவீத மாரடைப்புகள் மருத்துவமனைக்கு வெளியில் தான் நடக்கிறது. முதலுதவி செயல்பாடு தெரிந்து இருப்பின், அவரை காப்பாற்றலாம். பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் சி.பி.ஆர்., முதலுதவி செயல்பாடுகளை, அறிந்துகொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கு சுவாசக் குறைபாடுகளே, பெரும் பாலான திடீர் இதய செயலிழப்புக்கு காரணமாக இருக்கும். அச்சமயம், ஆற்றல்மிக்க சி.பி.ஆர்., வாயிலாக, ஆக்சிஜன் குறைபாடு தவிர்த்து மூளை சேதத்தை தடுப்பது சாத்தியம். எப்போது சி.பி.ஆர்., வழங்க வேண்டும் என்ற குழப்பம், பலருக்கு இருக்கும். ஒருவர் மயக்கமடைந்து மூச்சுவிடாமலும், தட்டினாலும் எந்த ஒரு ரியாக் ஷனும் இல்லாமலும் இருந்தால், சி.பி.ஆர்., கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதில், அமெரிக்க சுகாதார சங்கத்தின் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், மோகன், அருண்ஷாம் ஆகியோர் மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள், செவிலியர்களுக்கு செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் சுப்பா ராவ், நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.