ரோடு வசதி இல்லாததால் சிகிச்சைக்கு தொட்டில் பயணம்
வால்பாறை; காட்டுமாட்டை கண்டு பயந்து ஓடிய பழங்குடியின பெண்ணின் காலில் படுகா யம் ஏற்பட்டதை தொடர்ந்து, ரோடு வசதி இல்லாததால் பெண்ணை தொட்டில் கட்டி துாக்கி வந்தனர். வால்பாறை அடுத்துள்ளது ேஷக்கல்முடி எஸ்டேட். இங்கிருந்து, 1.5 கி.மீ., தொலைவில் உள்ளது பாலகணாறு பழங்குடியின செட்டில்மென்ட். இந்த செட்டில்மென்ட்டில் வசிக்கும் காளிமுத்து என்பவரின் மனைவி தங்கமாள், 45. இவர், ேஷக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலாக பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு இவர் செட்டில்மென்ட் பகுதி அருகே நடந்து செல்லும் போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டு மாட்டை கண்டு அலறியடித்து ஓடினார். அப்போது, தடுமாறி கிழே விழுந்ததில் இடது காலில்படுகாயம் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதாலும், ரோடு வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியாது என்பதாலும், நேற்று காலையில் காயமடைந்த தங்கமாளை தொட்டில்கட்டி பழங்குடியின மக்கள் துாக்கி, 1.5 கி.மீ, துாரத்துக்கு நடந்து வந்தனர். அதன்பின், ஆம்புலன்ஸ் வாயிலாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.