நட்பு வட்டாரத்தை பெருக்கும் கிரிக்கெட்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மாணவர்கள் பலர், மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடி தங்களுக்கான விடுமுறையை கழிப்பதுடன் நட்பு வட்டாரத்தையும் பெருக்கி வருகின்றனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற்போல் பொழுதை போக்கி வருகின்றனர்.சிலர், பாட்டு, நடனம், தற்காப்பு, விளையாட்டு போன்ற பயிற்சி வகுப்புகளில் கவனம் செலுத்துகின்றனர். அதேநேரம், விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், நட்பு வட்டாரத்தை பெருக்கும் வகையில் கிரிக்கெட் விளையாடி விடுமுறையை கழித்து வருகின்றனர்.மாணவர்கள் கூறியதாவது: மாணவர்கள் சிலர், சுற்றுலா சென்று திரும்புகின்றனர். சிலர், மொபைல்போனில் பொழுதைக் கழிக்கின்றனர். நாங்கள், வெளியூரில் இருந்து வந்த இளைஞர்களுடன் பேதமில்லாமல் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.கிரிக்கெட் விளையாடுவது எங்கள் பொழுதுபோக்கு. அதேநேரம், இந்த விளையாட்டு வெற்றி தோல்வியை புரிய வைக்கிறது. தனித்திறன்களை வெளிப்படுத்த கற்றுத் தருகிறது. குறிப்பாக, புதிய நட்பு வட்டாரத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு, கூறினர்.