சாமியார் வேடத்தில் பதுங்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு
கோவை; சாமியார் வேடத்தில் இரண்டு ஆண்டுகளாக, மருதமலையில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.குற்றவழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாததால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், 2023ம் ஆண்டு முதல் அன்னூரை சேர்ந்த மணிகண்டன், 42 என்பவர் போதை பொருள் தடுப்பு வழக்கில் கோர்ட்டில், ஆஜராகாமல் இருந்தார்.பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தேடி வந்தனர். மணிகண்டன் கோவை மருதமலை அடிவாரத்தில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் சாமியார் உடையில், கழுத்தில் மாலை அணிந்தபடி, அங்குள்ள சாமியார்களுடன் மணிகண்டன் மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து சிறையில் அடைத்தனர்.