ஊட்டியில் இ -- பாஸ் முறை வால்பாறையில் குவியும் கூட்டம்
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாகும். ஊட்டி, கொடைக்கானலை அடுத்து வால்பாறைக்கு தான் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணியர் சென்று வர, இ - பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா வாகனங்கள் சென்று வருவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையால் சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இதனால், இ - பாஸ் நடைமுறைப்படுத்தப்படாத வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணியர், இயற்கை அழகை கண்டு ரசிப்பதுடன், அரிய வகை வன விலங்குகளையும் நேரில் கண்டு ரசிக்கின்றனர். அட்டகட்டி இருவாச்சி பறவை வியூ பாயின்ட், ஆர்க்கிட்டோரியம், டைகர் வேலி, சக்தி - தலனார் வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு டேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அவர்களை கவர்ந்துள்ளன.