சைபர் கிரைம் தொடர்கதை! விதவிதமான ஆன்லைன் மோசடி நடக்குது; விழிப்புணர்வால் ஏற்படவில்லை நன்மை
பெ.நா.பாளையம்; சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், வித, விதமான ஆன்லைன் மோசடியில் சிக்கி, தினமும் பணம் இழந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் ஆன்லைன் மோசடி வழியாக பணம் இழப்பவர்களின் எண்ணிக்கை, சுமார், 500 ஆக இருந்தது. தற்போது, 1000 ஆக உயர்ந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும், பல்வேறு கருத்தரங்குகள் வாயிலாகவும், தொடர்ந்து சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும், ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக வீடியோ கால் வாயிலாக பணம் கேட்டால், தயவு செய்து பணம் அனுப்பாதீர்கள். போன் செய்து அல்லது எஸ்.எம்.எஸ்., வாயிலாக ஒரு சதவீத வட்டி மற்றும் மானியத்துடன் லோன் தருவதாக கூறி, பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர்கள். தெரியாத நபர்கள் டெலிகிராம், வாட்ஸ் அப், முகநூல் மற்றும் வீடியோ காலில் தொடர்பு கொண்டால் பதில் அளிக்க வேண்டாம். ஓ.டி.பி., நம்பரை யாரிடமும், எதற்காகவும் தெரிவிக்கக் கூடாது.கடன் வாங்க மொபைல் போனில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் உங்களை ஆபாசமாக காட்ட வாய்ப்பு ஏற்படும். முன் பின் தெரியாத நபர்கள் கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறினால், பணம் கட்டவோ, அதைப் பெற்றுக் கொள்ளவோ வேண்டாம். அதிக லாபம், வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ஆன்லைன் முதலீடு என்று சொன்னால், அதில் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். ரிவார்டு பாயிண்ட்ஸ் வரும் என்று லிங்குகளை அனுப்பினால், அதை தொட வேண்டாம்.அமேசான், மீசோ ஆகியவற்றிலிருந்து கார், பணம் பரிசாக விழுந்து உள்ளது எனக் கூறி பணம் கட்ட சொன்னால், பணம் கட்டாதீர்கள். இதனால் மொத்த பணத்தையும் இழக்க நேரிடும். ஜி.எஸ்.டி., கஸ்டம்ஸ், ஏர்போர்ட் அதிகாரி எனக்கூறி தொடர்பு கொண்டால் பணம் அனுப்பாதீர்கள். அவர்களை நம்ப வேண்டாம். இது போல பல்வேறு வலைகளை வீசி, பணம் பறிக்கும் கும்பல் ஆன்லைனில் உலாவுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.பெண்கள், வயதானவர்கள் ஆகியோரை குறி வைத்து ஆன்லைன் மோசடி அதிகமாக நடக்கிறது. சமீப காலங்களாக போக்குவரத்து விதிகளை மீறி சென்றதாக கூறி, அபராதம் விதித்து அதன் வாயிலாக ஆன்லைனில் பணத்தை திருடும் கும்பலின் நடமாட்டம் உள்ளது. ஆன்லைனில் பணத்தை இழந்தால், உடனடியாக, 1930 என்ற எண்ணுக்கு போன் செய்து புகாரை பதிவு செய்யுங்கள்.இவ்வாறு, சைபர் கிரைம் போலீசார் கூறினர்.