உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டான்டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: வழங்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

டான்டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: வழங்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

வால்பாறை: 'டான்டீ' தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்காவிட்டால் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில தலைவர் கூறினார். வால்பாறை புதுமார்க்கெட் அலுவலகத்தில், அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில தலைவர் அமீது பேசியதாவது: புதிய சம்பள ஒப்பந்தத்தின் படி, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஜூலை மாதம் முதல் அக்., மாதம் வரையிலான நிலுவைத்தொகை பெற்றுத்தர, தோட்ட அதிபர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும் நிலுவைத்தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் போது, 600 ரூபாய் நன்கொடையை யாரும் தொழிற்சங்கத்திற்கு தர வேண்டாம். தமிழகத்தில் பணிபுரியும் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசுக்கு சொந்தமான 'டான்டீ' தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 444 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. டான்டீ தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பணிபுரியும் 'டான்டீ' தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையுடன் கூடிய ஊதிய ஊயர்வு வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., தொழிற்சங்கத்தின் சார்பில் விரைவில் மாநில அளவிலான போராட்டம் 'டான்டீ' அலுவலகம் அமைந்துள்ள குன்னுாரில் நடத்தப்படும். வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து, தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து எஸ்டேட்களிலும் கூடுதலாக பெண் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும். எஸ்டேட் பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிக்கு சென்று வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், அவைத்தலைவர் பாலு, மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், ஜெ.பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி