அங்கன்வாடி மையங்களில் ஆபத்து... உதிரும் கட்டடம்!
வால்பாறை வால்பாறையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை, இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என, 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சப்-கலெக்டரிடம் மனு கொடுத்ததால், அவரது அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில், 660 குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.வால்பாறையில் பல்வேறு இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக, எம்.ஜி.ஆர்.,நகர், காமராஜ் நகர் ஆகிய இரு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், நகராட்சி சார்பில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. குறிப்பாக சமையல் அறையின் மேற்கூரை உதிர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.அங்கன்வாடி மையம் முழுவதும் மழை நீர் தேங்கி குழந்தைகள் அமர முடியாத நிலை உள்ளது. இதனால், அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது. அங்கன்வாடி மையத்தை இடித்து புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி, நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அருகில் உள்ள வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் தற்காலிமாக செயல்படுகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட 10 அங்கன்வாடி மையங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. பாதுகாப்பற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும்,' என்றனர்.இதனிடையே, அங்கன்வாடியின் பரிதாப நிலை குறித்து பா.ஜ.,நிர்வாகிகள், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் புகார் தெரிவித்தனர். அதன்பின், நகராட்சி அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்யதனர்.நகராட்சி கமிஷனர் விநாயகத்திடம் கேட்ட போது, 'எம்.ஜி.ஆர்.,நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டட உறுதித்தன்மை குறித்து, சப்- கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மாவட்ட கலெக்டர் உத்தரவு வந்த பின், நகராட்சி சார்பில் அங்கன்வாடி மையம் புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.