UPDATED : செப் 09, 2026 08:52 PM | ADDED : செப் 09, 2026 08:44 PM
கோவை: மழை இல்லாததால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க, குடிநீர் வினியோக இடைவெளியை அதிகரிக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மாநகருக்கு தினசரி 308.89 எம்.எல்.டி., குடிநீர் தேவைப்படுகிறது. சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 மற்றும் ஆழியாறு திட்டங்கள் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. எல்நினோ காரணமாக பருவமழை குறைந்தது. சிறுவாணி, பில்லூர் அணைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. அணைகளில் நீர் குறைந்து வருவதால், குடிநீர் விநியோக இடைவெளியை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது: 50 அடி நீர்ப்பிடிப்பு அளவுள்ள சிறுவாணியில், தற்போது 29 அடி நீர்தான் உள்ளது. தினசரி 50-55 டி.எம்.சி. குடிநீர் சப்ளையாகிறது. பில்லுார் அணையில் 77 அடி நீர் உள்ளது. ஒரு வாரமாக மழை இல்லை. மாநகர் மட்டுமின்றி பல கிராமங்கள் திருப்பூர் பில்லுார் அணையை நம்பியுள்ளன. சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளுக்கான முக்கிய ஆதாரமாக பில்லுார் உள்ளது. அக்கிணறுகள் வறண்டு விட்டன. சிறுவாணியின் தினசரி குடிநீர் விநியோகத்தை, 125 எம்.எல்.டி.யில் இருந்து, 40 எம்.எல்.டி.,யாக குறைக்க உள்ளோம். பில்லுார் குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை கலெக்டர், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு செய்வோம். தற்போது சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த இடைவெளியை 5 நாட்களாக அதிகரிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். வடகிழக்கு பருவமழையில் போதுமான தண்ணீர் கிடைத்தால், குடிநீர் விநியோக இடைவெளி குறைக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.