கட்டுமான பணியில் குறைபாடு; ரூ.3 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கோவை; கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, அத்திப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி, இவரது மகள் திவ்யா ஆகியோர் சேர்ந்து, ஸ்டார் பில்டர் என்ற கட்டுமான நிறுவனத்திடம், 3,300 சதுர அடி கொண்ட கட்டடம் கட்ட, 48 லட்சம் ரூபாய்க்கு, 2022, ஜூலை, 2ல் ஒப்பந்தம் செய்தனர். இதற்கான பணத்தை முழுமையாக செலுத்திய பிறகும், கட்டுமான பணியை முழுமையாக முடிக்கவில்லை. சுவரில் விரிசல் ஏற்பட்டதோடு, படிக்கட்டுகளில் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து கட்டுமான நிறுவனத்திடம் கேட்ட போது, முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர்களுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாய், மனஉளைச்சலுக்கு, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.