பெயின்ட் அடித்ததில் குறைபாடு; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; வீட்டுக்கு பெயின்ட் அடித்ததில் சேவை குறைபாடு செய்ததால், வீட்டு உரிமையாளருக்கு,50,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை, மதுக்கரை மார்க்கெட் , லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் வீட்டுக்கு பெயின்ட் அடிப்பதற்காக, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைன் வாயிலாக ஆர்டர் கொடுத்தார். குளத்துப்பாளையம் ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து பெயின்ட் அடிப்பதற்கு ஆட்கள் அனுப்பினர். பணியாட்கள் வர்ணம் அடித்த போது, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், காஸ் ஸ்டவ் அடுப்பு ஆகிய பொருட்களில் பெயின்ட் சிதறியது. இதனால் சம்பத்குமார் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா பிறப்பித்த உத்தரவில், ''பெயின்ட் அடித்த தொழிலாளர்கள் கவனகுறைவாக செயல்பட்டதால், பொருட்களில் பெயின்ட் சிதறி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ''இதனால் எதிர்மனுதாரர்கள் சேர்ந்து, மனுதாரருக்கு, செலவு தொகையில், 17,500 ரூபாய் திருப்பி கொடுப்பதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.