உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தையாற்றில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளில் இழுபறி மழைக் காலத்துக்கு முன் முடிக்க வலியுறுத்தல்

காந்தையாற்றில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளில் இழுபறி மழைக் காலத்துக்கு முன் முடிக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்: காந்தையாற்றில் தண்ணீர் குறைந்த நிலையில், இயந்திரங்களையும், அதிக ஆட்களையும் வைத்து, மழை காலம் துவங்கும் முன், உயர் மட்ட பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pr1dqvqe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்தால், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய மலைவாழ் கிராம மக்கள் பரிசலில் பயணம் செல்வது வழக்கம். இந்நிலையில் காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 15 கோடியே, 40 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பாலத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாலம் கட்டும் பணிகள் துவங்கின. ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஐந்து பில்லர்களும், இரண்டு இடங்களில் பாலத்தின் மீது சாலையும் அமைத்துள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன் பெய்த மழையால், பவானி சாகர் அணையில், 102 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது. காந்தையாற்றில், 30 அடிக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக பொதுமக்கள், விவசாயிகள் பரிசலில் பயணம் செய்தனர். இது குறித்து காந்தவயல் விவசாயிகள் சார்பில் ரத்தினசாமி கூறியதாவது: காந்தையாற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெதுவாக நடக்கின்றன.தற்போது வரை பாதி அளவு பணிகள் மட்டுமே நடந்துள்ளன. காந்தையாற்றில் தண்ணீர் தேங்கியதை காரணம் காட்டி, கட்டுமான பணிகளை நிறுத்தி விடுகின்றனர். ஆற்றின் குறுக்கே இருந்த சாலையையும் இடித்து விட்டதால், ஆறு மாதங்கள் பரிசலில் பயணம் செய்து வந்தோம். இந்த காலத்தில் விவசாய விளை பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டனர். மிகவும் குறைவான ஆட்களை வைத்து, வேலைகள் நடைபெறுகின்றன. வேலைகளை கண்காணித்து துரிதப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. ஆற்றில் தண்ணீர் குறைந்து, இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் தற்போது தான் வேலையை துவங்கி உள்ளனர். ஆற்றின் மையப்பகுதியில் ஒரு பில்லர் அமைக்க வேண்டும். குழி தோண்டினால் நீர் ஊற்று அதிகம் உள்ளது. உயர் அழுத்த மின் மோட்டார்களை வைத்து, தண்ணீரை வெளியேற்றி, பில்லர் அமைக்க வேண்டும். ஜூன் மாதம் கேரளாவில் பருவமழை பெய்யத் துவங்கும். அப்போது ஆற்றில் அதிகம் தண்ணீர் வரும். இதனால் பாலம் கட்டுமான பணிகள் பாதிப்பு அடையும். ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதால், ஆபத்தான நிலையில், மாணவர்கள் ஆற்றை பரிசலில் கடந்து செல்லும் நிலை ஏற்படும். எனவே மழை காலம் துவங்கும் முன், அதிகமான இயந்திரங்களையும், ஆட்களையும் வைத்து பாலம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை