வடிகாலில் கழிவு தேக்கம் சுத்தப்படுத்த கோரிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், பிளாஸ்டிக் கழிவால் அடைபட்டு கிடக்கும் மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், 90க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் குப்பை பெறுவது ஒரு பிரிவாகவும், ரோட்டில் தேங்கும் குப்பை, சாக்கடையில் இருந்து எடுக்கும் கழிவுகளை அகற்றுவது மற்றொரு பிரிவாக நிர்வகிக்கப்படுகிறது.ஆனால், வீடுகள் மற்றும் வணிகக் கடைகளில் சேகரமாகும் கழிவுகள், முறையாக துாய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்கப்படுவதில்லை. மாறாக, ஆங்காங்கே திறந்தவெளியிலும் மழைநீர் வடிகாலிலும் வீசிப்படுகிறது.இதனால், பல வார்டுகளில், பாதாள சாக்கடை இணைப்பு பெறாத வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகளும் சேருவதால், கொசு உற்பத்தியாகி, துர்நாற்றமும், நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. ஜோதிநகர் பி.கே.எஸ்., காலனி, 6வது வீதியில், மழைநீர் வடிகாலில், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தேக்கியுள்ளது. இதுபோன்று, நகரில் ஆங்காங்கே மழைநீர் வடிகாலில் குவிந்து கிடக்கும் பாலித்தீன் கழிவுகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.