ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு ரூ.11 கோடி மதிப்புள்ள இடங்கள் மீட்பு
கோவை: கோவையில், சில ஆக்கிரமிப்பு கட்டடங்களை மாநகராட்சி நேற்று இடித்து, அகற்றியது; மற்ற கட்டடங்களுக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது. மொத்தம், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை மீட்டுள்ளது;கோவை மாநகராட்சி, 36 மற்றும், 40வது வார்டுகளுக்கு உட்பட்டது வடவள்ளி வி.என்.ஆர்., நகர். 1981ல் நகர ஊரமைப்புத்துறையில் மூன்று லே-அவுட்டுகளுக்கு அனுமதி பெறப்பட்டது. 10 சதவீத பொது ஒதுக்கீடாக, ஐந்து இடங்களில், ஒரு ஏக்கர், 69 சென்ட் ஒதுக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன. வி.என்.ஆர்., நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் ஜோசப், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற, கடந்த பிப்., மாதம் உத்தரவிட்டது. அதன்பின்பும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று, வி.என்.ஆர்., நகருக்கு சென்று, சில ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். மூன்று இடங்களில் இருந்த, 75 சென்ட் 'ரிசர்வ் சைட்'டில், 10 சென்ட் பரப்பில் இருந்த சலுான் கட்டடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. 2 சென்ட் கட்டட ஆக்கிரமிப்பாளருக்கு, 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம், 73 சென்ட் இடம் மீட்கப்பட்டது.மற்றொரு 'ரிசர்வ் சைட்' 17 சென்ட் குழந்தைகள் விளையாடும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டுமானம் இடிக்கப்பட்டது. கோவில் கட்டுமானத்தை அகற்றிக் கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இன்னொரு லே-அவுட்டில், 47 சென்ட் இடத்தில் குடியிருப்பை தவிர்த்து, மீதமுள்ள, 30 சென்ட் மீட்கப்பட்டிருக்கிறது,மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர், இந்த ஆக்கிரமிப்பை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இவ்விடங்களை சுற்றிலும் உடனடியாக வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.இதேபோல், வடக்கு மண்டலத்தில் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா தலைமையிலான குழுவினர், சரவணம்பட்டி பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை நேற்று மீட்டனர்.