உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமற்ற முறையில் கட்டிய கழிவுநீர் கால்வாய் இடிப்பு

தரமற்ற முறையில் கட்டிய கழிவுநீர் கால்வாய் இடிப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 15 வது வார்டுக்குட்பட்ட மங்கலகரைபுதூர் அருகே கொன்னமேடு சந்து, குருந்தமலை கோவில் சாலை உள்ளிட்ட இடங்களில் காரமடை நகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் 60 மீட்டர் தூரம் 3 அடி அகலத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கொன்னமேடு சந்து பகுதியில் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் காரமடை நகராட்சி நிர்வாகத்திடம் இரு வாரங்களுக்கு முன் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் தரமற்ற முறையில் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மீண்டும் இதே பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக போடப்பட்ட பாடிவாலில் கான்கிரீட்களுக்கு பதிலாக கருங்கற்களை வைத்து கலவை போட்டுள்ளனர். இதையடுத்து நேற்று கருங்கற்கள் தெரியாத அளவில் சிமென்ட் கலவை மூலம் கட்டட பணியாளர்கள் மறைத்தனர். இதனை பார்த்த கிராம மக்கள் அதிருப்தி அடைந்து பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க., நகர தலைவர் ஆறுமுகசாமி, தி.மு.க.,வின் அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் நித்யா மற்றும் நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து கட்டுமான பணிகளை பொதுமக்கள் முன்னிலையில் இடித்து அகற்றினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை