ஆனைமலை: ஆனைமலை அருகே, தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்ததால், பக்தர்கள் அதிகளவு சென்று தரிசனம் செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 5ஆயிரம் அடி உயரத்தில் தாடகை நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்குகிறது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்தாண்டு மழை காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் பக்தர்கள் செல்ல அனுமதி மறுத்தது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நடப்பாண்டு மலையேறி அம்மனை தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து, கோவிலுக்கு செல்ல உள்ளூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபம் தரிசனத்துக்காக சென்றனர். மருத்துவ பரிசோதனை மற்றும் முன் அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே பரிசோதனை செய்து, மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். மேலும், பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். வனவிலங்குகளை கண்டால் துன்புறுத்தவோ, அருகில் செல்லவோ, புகைப் படங்கள் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூறுகையில், 'அங்கலகுறிச்சி தாடகை நாச்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். ராமர் வந்து சென்றதற்காக ராமர் பாதம் உள்ளது. சித்தர்கள் தவம் செய்த இடமாகும். இங்கு மகாதீபம் தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது மன மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.