அரசுப்பள்ளி மாணவர்களின் திறன்களை கண்டறிவதில் சிக்கல்
கோவை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிய நடத்தப்படும் உலகத் திறனாய்வு உடல்திறன் தேர்வு, போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் பெயரளவுக்கு நடப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உலகத் திறனாய்வு உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. உலகத் திறனாய்வு உடல்திறன் தேர்வை நடத்த, பெரும்பாலான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மற்ற பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் (நிலை 1, 2) 'மேப்பிங்' செய்யப்பட்டுள்ளனர். ஒரு உடற்கல்வி ஆசிரியர் இரண்டிற்கும் மேற்பட்ட பள்ளிகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஜூலை இறுதிக்குள் இந்த தேர்வை நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, முதலமைச்சர் கோப்பைக்கான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதால், உடல்திறன் தேர்வில் முறையாக கவனம் செலுத்த முடியவில்லை என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், '102 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால், உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நீடித்து வருகிறது' என்று தெரிவித்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
மாநிலம் முழுவதும் செயல்படும் 3,110 உயர்நிலை பள்ளிகளில், 89 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் 232 நடுநிலை மற்றும் 83 உயர்நிலை பள்ளிகள் பெரும்பாலானவற்றில், உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. சில பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.