விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
கருமத்தம்பட்டி; கோவை புறநகரில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி விழாவை ஒட்டி, புறநகர் பகுதி வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்குரிய விநாயகர் சிலைகள் முதல் பொது இடங்களில் வைத்து வழிபடக்கூடிய பெரிய சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் கோவில்களில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூஜைக்கு தயாராகி வருகின்றன. அதேபோல், விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டினர். விநாயக பெருமானுக்கு உகந்த அருகம்புல் மாலைகள், எருக்கம் பூ, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழங்கள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, அப்பம், கொழுக்கட்டைக்கு தேவையான மாவு வகைகள் மற்றும் பூஜை பொருட்களை கடைகளில் வாங்கி சென்றனர். இதனால், புறநகர் பகுதிகளில் உள்ள மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள் மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. டி.ஐ.ஜி. ஆய்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. வரும் 29ஆம் தேதி சிலைகள் வாகனங்கள் வாயிலாக பவானி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், மேட்டுப்பாளையம் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள பவானி ஆற்றங்கரை பகுதிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அதிய மான், இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.-----