மீடியா டி20 கிரிக்கெட் போட்டியில் தினமலர் - கிருஷ்ணா அணிகள் வெற்றி
கோவை; ஸ்ரீ கிருஷ்ணா 'பிரஸ் அண்ட் மீடியா டி20 கிரிக்கெட்' போட்டி கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன மைதானத்தில் 12ம் தேதி துவங்கி ஆக., 3ம் தேதி வரை நடக்கிறது. ஏழாவது ஆண்டாக நடக்கும் இப்போட்டியில் எட்டு அணிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் விளையாடுகின்றன. தற்போது, 'லீக்' போட்டிகள் நடந்துவருகின்றன. கடந்த, 26ம் தேதி 'தினமலர்' நாளிதழ் அணியும், தி டைம்ஸ் ஆப் இந்தியா அணியும் மோதின. முதலில் பேட் செய்த 'தினமலர்' அணி, 20 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. பிரபு 91 ரன் குவித்தார். விஜய் 54 ரன் விளாசினார். அடுத்து ஆடிய தி டைம்ஸ் ஆப் இந்தியா அணி, 19.2 ஓவரில் 86 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாம் போட்டியில், 'தினகரன்' அணியும், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் அணியும் மோதின. கிருஷ்ணா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு, 196 ரன் எடுத்தது. பிரவீன் ராஜ் 130 ரன் குவித்தார். 'தினகரன்' அணி 8.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்தபோது மழை பெய்தது. 'ரன் ரேட்' அடிப்படையில் கிருஷ்ணா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.