உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் நாளிதழின் வினாடி - வினா போட்டி: வெற்றி பெற்று அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி

தினமலர் நாளிதழின் வினாடி - வினா போட்டி: வெற்றி பெற்று அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், கரும்புக்கடை ஜீவன்ஸ் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும் நுண்ணறிவு திறன்களையும் ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுபடுத்தும் வகையில், வினாடி-வினா போட்டிகள் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி-வினா போட்டிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறுவர். அவர்களிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரும்புக்கடை ஜீவன்ஸ் பள்ளியில் நேற்று வினாடி-வினா போட்டி நடைபெற்றது. தகுதி சுற்றில் 180 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'ஐ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி அர்ஜுமந்த் இனயா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அப்ஷீன் ரியா ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சிவக்குமரன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !