உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்.. டாக்டர்கள் பற்றாக்குறையால் அதிருப்தி; இந்த நிலை மாறுமா?

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்.. டாக்டர்கள் பற்றாக்குறையால் அதிருப்தி; இந்த நிலை மாறுமா?

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 50 சதவீத டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கிராம மக்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமப்புற மக்களின் மருத்துவ சேவையில் முன்னிலை வகிக்கின்றன.நல்ல சுகாதார கட்டமைப்புடன், ரத்த பரிசோதனை வசதி, போதிய மருந்துகள் கையிருப்புடன் குடியிருப்புகளுக்கு அருகே அமைந்துள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மருத்துவ சேவை

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 2 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்; தெற்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 3 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டும் வருகின்றன.தினமும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தை பொறுத்தமட்டில், 250 புறநோயாளிகளும்; கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 150 புறநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர, கர்ப்பிணிகள், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

காத்திருப்பு

ஆனால், சில ஆண்டுகளாக, டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், மொத்தம், 12 டாக்டர்களுக்கு, 6 பேர்; தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், மொத்தம், 14 டாக்டர்களுக்கு, 10 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து, களப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு செல்லும் மக்கள், பல மணி நேரம் காத்திருந்து தவிக்கின்றனர்.மேலும், தொடர் கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புள்ள நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு, நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். இதுஒருபுறமிருக்க, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்களும் கூடுதல் பணிச்சுமையால் திணறி வருகின்றனர்.

அரசுக்கு அறிக்கை

சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கிராமப்புறங்களில், காய்ச்சல், இருமல் போன்ற பருவ கால நோய்கள், கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சைகள், முதியோருக்கான சிகிச்சைகள் போன்றவற்றுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவசியம்.ஆனால், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 50 சதவீதம் அளவில் டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ப டாக்டர் பணியிடங்களை உருவாக்கி, சுழற்சி முறையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். இந்நிலையில், டாக்டர் பணியிடங்களை நிரப்ப, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ