தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி மத்தாப்பு! வாண வேடிக்கைகளில் பிறந்தது உற்சாகம்
கோவை : கோவை மக்கள் நேற்று புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பை சுவைத்தும் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி வேறுபாடுகளை களைந்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடினர்.ஆண்டுதோறும் கொண்டாடும் தீபாவளிக்கான முன் ஏற்பாடுகள் வாரக்கணக்கில் செய்து வந்தாலும் அதன் ஞாபகங்கள், அடுத்த ஆண்டு வரை தொடரும் என்பது வழக்கம்.அந்த வகையில், கோவை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் வகையில் தீபாவளி பண்டிகையை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடினர்.அதிகாலை எழுந்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்களை உட்கொண்டு, கண்களைக் கவரும் வாண வேடிக்கைகளும், வெடிகளுடன் தீபாவளியை கொண்டாடினர். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு திரளானோர் குடும்பத்துடன் சென்று வழிபாடுசெய்தனர். நான்கு சக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததாலும் மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும் மலைமேல் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக நான்கு சக்கர வாகனங்களில் வரவேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். படிகள் வழியாகவும் திருக்கோவில் பஸ் வாயிலாகவும் மலைமீது சென்று வழிபட்டனர்.ஈச்சனாரி விநாயகர், பேரூர் பட்டீஸ்வரர், புலியகுளம் முந்திவிநாயகர், பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர், ராம்நகர் கோதண்டராமர் கோவில்களுக்கு குடும்பம் சகிதமாகசென்று வழிபாடு செய்தனர்.செல்வவளம் பெருகும் லட்சுமி குபேரர், சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். திரைப்படங்களுக்கு விரைந்த மக்கள்
கோவையிலுள்ள பெரும் பாலான தியேட்டர்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது, சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன், ஜெயம்ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடிபெக்கர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. இதை பார்க்க நகரிலுள்ள தியேட்டர்கள் முன்பு புத்தாடை அணிந்து ஏராளமானோர் வந்திருந்தனர். ஈஷாவிற்கு சென்ற வட மாநிலத்தவர்
கோவையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஈஷாவை நோக்கி பயணித்தனர். காந்திபுரத்தில் கட்டுங்கடங்காத வடமாநில மக்களின் கூட்டம் நிரம்பியிருந்தது. தகவலறிந்த அரசு போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து ஈஷாவுக்கு சிறப்பு பஸ்களை இயக்கியது. அதில் பலரும் ஈஷாவுக்கு சென்று வழிபாடு செய்தனர். கோவை குற்றாலத்தில் நிரம்பிய மக்கள்
கோவையின் சுற்றுலா மையமான கோவை குற்றாலத்தில் நேற்று மதியம் ஏராளமான மக்கள் திரண்டனர். குடும்பத்துடன் வந்தவர்கள் எடுத்து வந்திருந்த அசைவ உணவுகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிமாறி மகிழ்ந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து கோவை குற்றாலத்துக்கு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்திருந்தது. இனிப்பு வாங்க அலைமோதிய கூட்டம்
தீபாவளி நேற்று கொண்டாடப்பட்டாலும் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி காந்திபுரம் மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஸ்வீட் கடைகளில் நேற்று வியாபாரம் தொடர்ந்தது. ஏராளமானோர் நேற்றும் இனிப்பு கார வகைகளை வாங்கி சென்றனர். டாஸ்மாக்கும் நிரம்பி வழிந்தது
மதுபானங்களை வாங்குவதற்கும் இளைஞர்கள், முதியவர்கள் என்று பாரபட்சமின்றி ஆர்வம் காட்டினர். பலரும் குடித்துவிட்டு மதுபோதையில் டாஸ்மாக் கடைக்கு முன்பே போதையில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். மதுபானக்கடைகளுக்கு அருகே வாகனங்களில் வேகமாக செல்வதும் எதிர் எதிரே வாகனங்களில் முட்டிக்கொள்ளும் சம்பவங்களும் அதனால் தகராறுகளும் ஏற்பட்டது. திறந்திருந்த ஜூவல்லரிகள்
தீபாவளித்திருநாளில் சிறப்பு விற்பனைக்காவும் ஆர்டர் செய்த நகைகளை டெலிவரி கொடுப்பதற்காகவும் ராஜ வீதியிலுள்ள பெரும்பாலான ஜூவல்லரிகள் திறக்கப்பட்டிருந்தது. பலரும் ஆர்டர் செய்த நகைகளை பூஜை செய்து வங்கி சென்றனர். வழக்கமான விற்பனையும் நடந்தது.