தி.மு.க., நிர்வாகிக்கு மிரட்டல்; நகர துணை செயலாளர் கைது
வால்பாறை; வால்பாறையில் தி.மு.க., நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த, நகர துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர், தி.மு.க., சார்பு அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு பூமார்க்கெட் பகுதியில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, தி.மு.க., நகர துணை செயலாளர் சரவணபாண்டியன்,54, 'கட்-அவுட்'ல் கட்சி நிர்வாகிகள் படம் வைப்பது தொடர்பாக சத்தியமூர்த்தியிடம், மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.ஜாதி பெயரை குறிப்பிட்டு, தகாத வார்த்தையால் பேசி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சத்தியமூர்த்தி வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க.,நகர துணை செயலாளர் சரவணபாண்டியனை கைது செய்தார்.