பண மோசடி செய்ததாக தி.மு.க., நிர்வாகி மகன் கைது
போத்தனூர்; அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, மக்களிடம் மோசடி செய்த தி.மு.க.. நிர்வாகியின் மகனை போலீசார் கைது செய்தனர். குனியமுத்தூர் பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை; குனியமுத்தூர் பகுதி தி.மு.க., அவைத்தலைவர். இவரது மகன் தம்பிதுரை, 31. கடந்த, 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு வாங்கி தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்றுள்ளார்,ஆனால் எதுவும் செய்யவில்லை. பணம் கொடுத்தோர் நெருக்கடி அளிக்கத் துவங்கியதும், தம்பிதுரை திடீரென மாயமானார். அவரிடம் ஏமாந்தவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பிதுரை தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதை அறிந்து அவரால் பாதிக்கப்பட்ட, 40க்கு மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். போலீசார் அங்கு சென்று மக்களை சமாதானப்படுத்தினர். தம்பிதுரையை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டோரிடம் புகார் மனு பெறப்பட்டது.