தி.மு.க. நகராட்சி தலைவர் - கவுன்சிலர் மோதல்; ரூ.99 லட்சம் ரோடு பணி நிறுத்தம்
வால்பாறை; கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில், மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ், 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் ரோடு பணிக்கான பூமி பூஜை, தி.மு.க., கவுன்சிலர் காமாட்சி (10வது வார்டு) தலைமையில் நேற்று நடந்தது. பணி துவங்கிய பின் அங்கு வந்த, 14வது வார்டு கவுன்சிலரும், நகராட்சி தலைவருமான அழகுசுந்தரவள்ளி, ''எனது வார் டில் வேறு கவுன்சிலர் எப்படி பூமி பூஜை செய்யலாம்,'' என கேட்டு பணி செய்ய வேண்டாம் என,தடுத்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடையே நடைபெறும் மோதலால் வளர்ச்சி பணி பாதிக்கப்படுவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, ''நகராட்சி அதிகாரிகள் யாருடைய அனுமதியும் இன்றி, பூமி பூஜை போடபட்டுள்ளது. இன்று (3ம் தேதி) முறைப்படி ரோடு பணிக்கான பூமி பூஜை நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெறு ம்,'' என்றார். கவுன்சிலர் காமாட்சியிடம் கேட்ட போது, ''ரோடு பணி துவங்குவதற்கு எந்த வார்டு என பார்க்க வேண்டியதில்லை. மக்கள் நலன் கருதி ரோடு பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஆனால், நகராட்சி தலைவர் பணி செய்ய விடாமல் தடுத்துவிட்டார். வளர்ச்சி பணிகளுக்கு நகராட்சி தலைவரே தடையாக உள்ளார்,'' என்றார். தலைவர் அழகுசுந்தரவள்ளி கூறுகையில், ''வளர்ச்சி பணிக்கு நான் தடையில்லை. ஆனால், எனது வார்டில் மற்றொரு வார்டு கவுன்சிலர் பூமி பூஜை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த குமரன் ரோடு பொதுமக்கள், பழைய ரோட்டை தோண்டி விட்டு, புதிதாக கான்கிரீட் ரோடு போட வேண்டும் என்றனர். அதனால், பணியை நிறுத்தியுள்ளேன்,'' என்றார்.
மோதலுக்கு பின்னணி என்ன?
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., மேலிடம் அறிவித்த தலைவர் வேட்பாளர் காமாட்சி. ஆனால், அவரை எதிர்த்து, போட்டியிட்ட அழகுசுந்தர வள்ளி வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று தலைவரான நாளில் இருந்து, இரு வருக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும், இவர்களின் மோதல் தொடர் கதையாகவே உள்ளது. இதனால், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்வதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கட்சி மேலிடமும் இதை கண்டு கொள்ளாததால், இருதரப்பினரிடையே எழுந்துள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பாதிப்பது பொதுமக்கள் தான்.