கடன் வாங்கியதே தி.மு.க.,வின் சாதனை; பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்
பொள்ளாச்சி; ''தி.மு.க., ஆட்சியில், புதிதாக, 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனை ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ஆதியூர் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 13.75 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதனை திறந்து வைத்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் பேசியதாவது:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நுாறு நாட்கள் சட்டசபை நடத்தப்படும். எம்.எம்.ஏ.,க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரு தினங்களுக்காக மட்டுமே, சட்டசபை கூட்டப்படுகிறது.இதன் பராமரிப்பு பணிக்கென, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இரு நாட்களில் எந்த தொகுதிக்கான பிரச்னையையும், மக்களின் பொதுவான கோரிக்கைகளையும் முன்வைக்க முடியாது.வெள்ள பாதிப்பின்போது, துணை முதல்வர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வெள்ளம் வடிந்த பின், வெளியே வந்து, மக்களைப் பார்த்து ஆரவாரம் செய்கிறார். தி.மு.க., ஆட்சி, 13 அமாவாசை கழித்து, வீட்டுக்கு சென்று விடும்.தி.மு.க., ஆட்சியில் விவசாயம் மட்டுமின்றி, அனைத்து தொழில்களும் நசிந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சியை விட்டு விலகும்போது, 5.10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. தற்போது, 8.60 லட்சம் கோடி கடன் ஆகியுள்ளது. புதிதாக, 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனை ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். இதுதான் அவரது ஆட்சியின் சாதனை.இவ்வாறு, அவர் கூறினார்.