தி.மு.க.வினர் நுாதன பிரசாரம்
வால்பாறை; சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என, கட்சியினர் நுாதன முறையில் தெருமுனைப் பிரசாரம் செய்தனர். வால்பாறை நகர தி.மு.க., சார்பில் அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே விளக்கும் வகையில், தெருமுனைப்பிரசாரம் நடந்தது. நகர செயலாளர் சுதாகர் தலைமையில் நடந்த தெருமுனை பிரசாரத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர். முன்னதாக, வால்பாறை நகரில் துவங்கிய தெருமுனை பிரசாரத்தில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்த ஒருவர், தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தவிர்க்க முடியாது, இந்த வாக்கு நிஜமாகும், என, குடுகுடுப்பை அடித்து, வால்பாறை நகரில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.